வட்டிக்கு வாங்கிய பணத்துக்காக 16 வயதான மகளை விற்ற தந்தை
தன்னுடைய மனைவியையும் இணைத்துக்கொண்டு வீட்டிலேயே நடத்திய சூதாட்டத்தில் விளையாடுவதற்காக, வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக, தன்னுடைய மகளையே விற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைக்குச் செல்லும் 16 வயதான மகளே இவ்வாறு விற்கப்பட்டுள்ளார் என்று அகலவத்த பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
கலவானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளி, அச்சிறுமியை ஒருவருடமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வட்டிக்கு பணம் கொடுக்கும் அந்த முதலாளி, சிறுமிக்கு அலைபேசியையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த அலைபேசி சின்னம்மாவின் கைகளுக்கு சிக்கியதை அடுத்தே இந்தக் குற்றச்செயல் அம்பலமானது.
அந்த சிறுமி, தன்னுடைய மாமாவினால் இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சந்தேகநபரான தந்தை, செவ்வாய்க்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியும் மாமாவும் பிரதேசத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயும்,தந்தையும், தன்னுடைய வீட்டுக்குள்ளேயே பல வருடங்களாக சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளனர்.
இந்த சூதாட்டத்துக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியான கலவானையைச் சேர்ந்த 38 வயதானவர், அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான தந்தை, சூதாடுவதற்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியிடம் பெற்ற பணத்துக்காக தன்னுடைய மகளையே பாலியல் செயற்பாட்டுக்காக வட்டி முதலாளியிடம் அனுப்பிவைத்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயலுக்காக தாய் எவ்விதமான அனுமதியையும் கொடுக்கவில்லை என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.