இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது
நாட்டின் பல பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகள் தாழ்வான நீரில் மூழ்கியுள்ளன.
தவலம, நெலுவ, மொரவக, அக்குரஸ்ஸ, அத்துரலிய, பிடபெத்தர மற்றும் கொட்டபொல ஆகிய தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மேலும், நெலுவ மற்றும் ஹப்பிட்டிய பகுதிகளில் உள்ள தாழ்நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தெனிய – அக்குரஸ்ஸ வீதியில் பல மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அந்த பாதையில் பஸ் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நெலுவ – மொரவக பிரதான வீதியில் அலபலதெனிய பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அக்குரஸ்ஸ – தவலம பிரதான வீதி தலங்கல்ல பிரதேசத்திலிருந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதேவேளை, தென் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கிரமாரா நீர்த்தேக்கம் தற்போது நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெய்யந்தர, சீனிபல்ல, மாகதுர மற்றும் ஆதபான ஆகிய பிரதேசங்களில் உள்ள கிரமாரா நீர்த்தேக்கத்தின் இருபுறங்களிலும் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.