தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமுலாக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்காரணமாக, குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரம் விசைப்படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, இந்திய மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகின்றது.

இந்தத் தடைக்காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 14 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.

இந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை பராமரித்தல், வலை பின்னுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.