மட்டக்களப்பில் புகையிரதம் மோதி ஒருவர் பலி
மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திலிருந்து நேற்று இரவு கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கருவப்பங்கேணியை சேர்ந்த இராசநாயகம் ரமேஸ்குமார் என்னும் 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 8.15மணியளவில் கொழும்பு நோக்கிச்சென்ற ரயிலில் குறித்த நபர் மோதுண்டு இறந்துள்ளதாகவும் குறித்த நபரின் சடலத்தினை உறவினர்கள் இன்று காலை அடையாளம் காட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் பணிப்புரைக்கு அமைய திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரண விசாரணையை முன்னெடுத்தார்.
அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.