வவுனியாவில் மினி சூறாவளி – இயல்பு நிலை பாதிப்பு
வவுனியாவில மினிசூறாவளியுடன் கூடிய மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.
வவுனியாவில் கடந்த சில தினங்களாக மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. நேற்று (24.03) மாலை மினிசூறாவளியுடன்கூடிய கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.
குறிப்பாக காற்றின் வேகம் அதிகரித்தமையால் நகரின் முக்கிய வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தது. இதனால் வீதிகளுடனான போக்குவரத்தும் சில மணிநேரம் தடைபட்டது. மாவட்ட செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வைத்தியசாலை, நீதிமன்றத் தொகுதி, கந்தசாமி கோவிலடி, பூந்தோட்டம், மகாறம்பைக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.
இதேவேளை பல இடங்களில் மரக்கிளைகள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்ததில் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் மதில்களும் சரிந்து வீழ்ந்துள்ளது.