உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
அதற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய வசதிகளை செய்துகொண்டே இருக்கிறது.
இதற்கமைய வாட்ஸ்அப் செயலியில் புதிதாக ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அம்சம்
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி IOS இயங்குதளத்தில் இயங்கக்கூடிய வாட்ஸ்அப்பின் (23.3.0.73) பீட்டா வெர்ஷனில் புதிய ஆடியோவை படியெடுக்கும் ட்ரான்ஸ்கிரிப்ஷன் (Transcription) எனப்படும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இந்த ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியை முழுமையாக அறிமுகப்படுத்துவதற்கான வேலையில் வாட்ஸ்அப் நிறுவனம் முனைப்பாக வேலை செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அலுவலகம் சம்பந்தமாக பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் இந்த ட்ரான்ஸ்க்ரிப்ஷன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீடியோ அழைப்புக்களில் அல்லது சாதாரண ஆடியோ அழைப்புக்களில் எதிர்ப்பக்கம் பேசுபவருடைய பேச்சு எழுத்து வடிவத்தில் படியெடுக்கப்பட்டு திரையில் காண்பிக்கப்படும்.
பல மொழிகளை தேர்வு செய்தல்
இந்த ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியில் நீங்கள் பல்வேறு விதமான மொழிகளை தேர்வு செய்து கொள்ள முடியும். நீங்கள் தேர்வு செய்யும் மொழியின் அடிப்படையில், நீங்கள் கேட்கும் ஆடியோவானது ட்ரான்ஸ்கிரிப்ஷன் செய்யப்படும்.
அதாவது எந்த மொழியில் உங்களது ஆடியோ இருக்கின்றதோ அந்த மொழிக்கு நீங்கள் வாட்ஸ்அப் டிரான்ஸ்கிரிப்ஷன் வசதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் வாட்ஸ்அப்பால் அந்த ஆடியோவை டிரான்ஸ்கிரிப்ஷன் செய்ய முடியாது.
இந்த வசதியானது எப்போதும் பயனர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்ற தெளிவான அறிவிப்பை வாட்ஸ்அப் இன்னும் அறிவிக்கவில்லை.
சமீபத்தில், குரூப் வீடியோ கால் பேசும் வசதியும், அதில் குறிப்பிட்ட ஒருவரை மட்டும் மியூட் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருந்தது.
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ளது போல வாட்ஸ்அப் கம்யூனிட்டி என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.