வீம்பு பேசி நாட்டை கட்டியெழுப்ப முடியாது
வீம்பு பேசி நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும், சரியான குழுவுடனும் சரியான தொலைநோக்குடன் நாட்டை கட்டியெழுப்புவதே மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தான் பேருந்தை ஓட்டுகிறாரா இல்லையா என்பதை பார்த்து விமர்சிப்பதை விட,இந்த நடவடிக்கை பலனுள்ளதா இல்லையா என்பதை ஆராய்வது உகந்தது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டின் கல்விக்கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கு என்ன விமர்சனம் வந்தாலும் முன்னெடுக்கும் பணிகள் நிறுத்தப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
உலகில் ஏறக்குறைய சகல அபிவிருத்தியடைந்த நாடுகளும் நவீன கல்வி முறைகளை பரிசோதித்து வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,கல்வியில் புதிய பாய்ச்சலின் ஊடாக ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.
பழைய போர்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இருந்த ருவண்டா நாடு தற்போது ஆப்பிரிக்காவின் சிங்கப்பூராக மாறியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,கல்வியில் புதிய போக்குகள் மூலம் முன்னேறிய நாடுகள் பல உள்ளன எனவும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ் 56 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று காலி உடுகம தேசியப் பாடசாலைக்கு இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.