யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளுடன் வீதிகளில் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதிகள் மற்றும் வாடகை அறைகளில் தங்கியுள்ள மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு தமது தங்குமிடத்திற்கு திரும்பும் வேளைகளில் பல்கலையை சூழவுள்ள வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்கும் இளைஞர்கள் கும்பல்கள் மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசுதல் , தமது அந்தரங்க உறுப்புக்களை காட்டுவது , ஆபாசமாக சைகைகளை காட்டுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் 300 பேர் கையொப்பம் இட்டு , பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முறையிட்டு இருந்தனர்.
பல்கலைக்கழகத்திற்கு வெளியே இவ்வாறான செயற்பாடுகள் நடப்பதனால் , மாணவிகளால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளத்துடன் ,பல்கலைக்கழக சூழலில் சிவில் உடைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.