நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளில் இடம்பெற்ற மோசடி


நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹட்டன், கொத்மலை மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய கல்வி வலயங்களின் பல தமிழ்மொழி மூல பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்ற நிலையில் மோசடிகளும் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தரம் 11 மாணவர்களுக்கு மாத்திரம் வலப்பனை கல்வி வலய அலுவகத்தால் வினாத்தாள்கள் பாடசாலைகளுக்கு அனுப்பபட்டுள்ளன. எவ்வாறெனினும் முதலாம் பகுதிக்கு விடை அளிக்கவேண்டிய புள்ளடித்தாள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இலவசமாக கிடைத்த குறித்த வினாத்தாள்களுக்கு கட்டணம் அறவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கமைய வலப்பனை கல்வி வலயத்தில் சில பாடசாலைகளில் 300 முதல் 410 ரூபாய் வரை தரம் 11 மாணவர்களிடம் கட்டணம் அறவீடு செய்யப்பட்டுள்ளது.பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கினூடாக இப்பணம் செலுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரம் 6 முதல் 9 வரை மாணவர்களிடம் 200 முதல் 290 ரூபாய் வரையிலும், தரம் 10ற்கு 300 முதல் 400 ரூபாய் வரையிலும் பாடசாலைகளில் பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியாவில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறித்த வினாத்தாள்கள் சரியான முறையில் தயாரிக்கப்படாது இணையங்களில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வினாத்தாள்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பதோடு, ஒவ்வொரு பாடசாலைகளிலும் வெவ்வேறான நேரங்களில் பரீட்சைகள் இடம்பெற்றுள்ளதாகவும் மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் பணம் அறவிடப்பட்டுள்ளதோடு அந்தப் பணம் பாடசாலையின் அபிவிருத்தி கணக்கில் வரவு வைக்கப்படாமை நிதி மோசடியென பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாம் தவணைக்கான பரீட்சை கட்டணமாக இவ்வாறு பெருந்தொகை பணம் மாணவர்களிடமும் பெற்றொரிடமும் அறவிடப்பட்டைமை குறித்து தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

கட்டணம் அறவிடப்பட்ட போதிலும் நேரசூசிக்கமைய பரீட்சைகள் நடத்தப்படாமை குறிதது மாணவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயமானது எதிர்காலத்தில் இலவசக் கல்வியை பாதிப்படைய செய்துவிடும் எனவும் இதுத் தொடர்பில் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமெனவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரீட்சையின் இரகியத்தன்மை பேணப்படவில்லை என்பதால் மாணவர்களிடம் பரீட்சை தொடர்பான நம்பத்கதன்மை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே.இந்திரசெல்வன் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் குணநல உள்ளீட்டு கற்றல் உபகரணங்களுக்காக பயன்படுத்தப்படவேண்டிய பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.தனியார் நிறுவனத்தில் அச்சுப்பிரதி செய்யப்பட்டுள்ள போதும் வெவ்வேறான தொகை அறவீடு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முதலாம் தவணை பரீட்சை பாடசாலை மட்டதிலும், இரண்டாம் தவணைப்‌‌‌ பரீட்சை வலய மட்டத்திலும் மூன்றாம் தவணை பரீட்சை மாகாண மட்டத்திலும் நடத்தப்படுவதோடு, மாணவர்களிடம் 65 ரூபாய் அறவீடு செய்யப்பட்டு பாடசாலை அபிவிருத்தி கணக்கின் மூலமாக செலவு செய்யப்படவேண்டும் என சுற்றறிக்கை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *