புகையிரதம் மோதி அடையாளம் தெரியாத இளைஞன் பலி
அநுராதபுரத்துக்கும் ஷ்ரவஸ்திபுர புகையிரத நிலையத்துக்கும் இடையில் புகையிரதப் பாதையில் இன்று (21) இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் மற்றும் ஷ்ரவஸ்திபுர புகையிரத நிலையங்களுக்கு இடையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் விசேட புகையிரதமொன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின்னர், உயிரிழந்த இளைஞன் அதே ரயிலில் கொண்டு வரப்பட்டு அனுராதபுரம் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த இளைஞனின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது புகையிரதம் மோதி விபத்து ஏற்பட்டதா என்பது இதுவரையில் தெரியவரவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அநுராதபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.