யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்த்தர் வவுனியாவில் சடலமாக மீட்பு
யாழ்.மல்லாகத்தை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவருடைய சடலம் வவுனியா – பூவரசங்குளம் காட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றது.
48 வயதுடைய அச்சுதநாயகர் ஜெயந்தகுமார் என்பவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர், வவுனியா கந்தன்குளத்திலுள்ள தமது உறவினர் வீட்டில் கடந்த ஒரு வருடமாக தங்கியிருந்து, அங்குள்ள காணியினை தனியாக பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதியிலிருந்து அவரை காணவில்லையென, பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த காட்டுப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் அவரை உடலமாக மீட்டனர்.
சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை, பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.