அரசியல் கட்சி வேறுபாடுகள் மறந்து அனைவரும் விளக்கேற்ற முன்வர வேண்டும்
வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05மணிக்கு அரசியல் கட்சி வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஒன்றிணைந்து விளக்கேற்ற முன்வரவேண்டும் என்பதுடன் அன்றைய தினம் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு தமிழ் மக்கள் சென்று அஞ்சலி செலுத்துவது கடமையெனவும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமானது.
மட்டக்களப்பிலுள்ள மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நாளை முன்னிட்டு இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இந்த சிரமதானம் நடாத்தப்பட்டது.
இந்த சிரமதானத்தில் பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சிரமதானத்தினை ஆரம்பித்துவைத்து கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்,
உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்.இந்நிலையில் வருடா வருடம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாம் நினைவு கூர்ந்திருக்கிறோம்.
இந்த மாவடி முன்மாரி துயிலும் இல்லத்திற்குத் தனியாக வந்து 2011 ஆம் ஆண்டு நினைவு மாவீரர்களை நினைவு கூர்ந்தேன். ஆனால் கடந்த வருடம் அதாவது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளின் காரணமாக எங்களுக்கெதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டதன் காரணமாக நாங்கள் வீடுகளிலேயே மாவீரர்களை நினைவு கூர்ந்திருந்தோம். ஆனால் இவ்வருடத்தில் அவ்வாறில்லாமல் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது என்ற காரணத்தினால் இவ்வருடம் அக்கெடுபிடி இருக்காது என நினைக்கிறேன்.
இந்நிலையில் வடக்கு- கிழக்கில் 33 மாவீரர் துயிலும் இல்லங்கள் இருக்கின்றன. அவற்றில் சில இல்லங்களில் படையினர் தங்கியுள்ளனர். இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் படையினர் தற்போதும் நிலைகொண்டுள்ளனர்.
இருந்தாலும் மற்றைய துயிலும் இல்லங்களில் நாங்கள் சிரமதானப் பணிகளை மேற்கொண்டு, இந்தமுறையும் வழமை போன்று ஏற்கனவே நாங்கள் 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு விளக்கேற்றினோமோ அந்த நிகழ்வை நாங்கள் செய்ய இருக்கிறோம்.
இவ்வேளையில் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பை விடுக்கிறோம். 2022 ஆகிய இவ்வாண்டில் கொண்டாடப்படவுள்ள மாவீரர் தினத்தில் பொதுமக்களாகிய நீங்கள் உங்களுக்கு வசதியான மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று, விளக்கேற்றி எமது மாவீரர்களை நினைவு கூருவது எங்கள் கடமை. இதை வட- கிழக்கிலுள்ள 33 துயிலும் இல்லங்களிலும், அதற்கண்மித்த இடங்களிலும் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உரிய தரப்புக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் மாவடி முன்மாரி துயிலும் இல்லத்தில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்களும் இணைந்து துப்பரவு செய்து கொண்டிருக்கிறோம். இதேபோன்று ஏனைய துயிலும் இல்லங்களிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி அனைத்து பேதங்களையும் மறந்து, ஒன்று திரண்டு ஓரணியாக வந்து எமது உறவுகளை நினைவு கூருவோம் என்றார்.