வவுனியா யுவதி கொலை – வெளியான திடுக்கிடும் தகவல்
வவுனியா, நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இளம் யுவதியொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினமிரவு (18) இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் சிவா நகர் பகுதியில் வசிக்கும் சிதம்பரப்பிள்ளை துரைராஜசிங்கம் பிருந்தாமலர் என்ற 21 வயது யுவதியே இவ்வாறு கட்டுத்துவக்கால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவ தினம் இரவு தனது வீட்டின் பின்புறமாகவுள்ள கதவைத் திறந்து வெளியில் வரும்போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற தபால் ஊழியரான 74 வயது தந்தையுடன் வீட்டில் தனியே வாழும் யுவதி தாயை இழந்துள்ளதாகவும் சகோதரர்கள் வேறு பகுதியில் வசிப்பதாகவும் நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டுவருவதாக பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி விஜேகோன் தெரிவித்தார்.
இக் கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாமென கூறப்படும் நிலையில் , சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குடும்ப பகை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படும் நிலையில் யுவதி உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.