QR குறியீட்டுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்
QR குறியீட்டுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கான பிரேரணை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகவும் அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்குத் தேவையான காகிதத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இந்த வருடத்திற்குள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறையை செயல்படுத்தும் போது ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, இந்த முறைக்குப் பதிலாக நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் உரிமத்தை வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறைகள் மற்றும் பிற நிபுணர் குழுக்களுக்கு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.