வீதியில் வைத்து பொலிஸ் அதிகாரி மீது கொடூர தாக்குதல்
அனுராதபுரம் மிகிந்தலை கல்லாட்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் வீதியில் கடுமையாக தாக்கியுள்ளதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பொலிஸ் சார்ஜன்ட் மிகிந்தலைக்கு சென்று பின்னர் திருகோணமலை வீதியில் கருவலகஸ்வெவ விகாரைக்கு எதிரில் உள்ள கடை ஒன்றுக்கு செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், பொலிஸ் சார்ஜன்டை வீதியில் தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர்கள் போதைப் பொருளை பயன்படுத்தும் நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மிகிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு பொலிஸாரை அனுப்பியுள்ளார். பொலிஸார் அங்கு சென்ற போது, சம்பவம் முடிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து ஏற்கனவே சென்று விட்டனர்.
மிகிந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிக்கு அறிவித்திருந்த போதிலும் அவர் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை என மிகிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.