டொனால்டு டிரம்ப் வீட்டில் இரகசிய ஆவணங்கள் – அதிர்ச்சியில் அமெரிக்கா
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இல்லத்தில் இருந்து அரசாங்க ரகசிய ஆவணங்கள் கைப்பற்றிய நிலையில் அவர் மீது நாட்டை வேவு பார்த்ததாக கூறி வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது புளோரிடா குடியிருப்பில் இருந்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுச் செல்லப்படாத உச்ச ரகசிய அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்ட நீதிமன்ற தரவுகளின்படி, புளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-ஏ-லாகோ தோட்டத்தில் இருந்து FBI அதிகாரிகள் முக்கிய தரவுகளை மீட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய ஆவணங்களும் டிரம்பின் சொகுசு மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தம் 20 பெட்டிகளில் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், ரகசியம் மிகுந்த புகைப்படங்கள், பொதுமன்னிப்பு கடிதம் உள்ளிட்டவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தொடர்பில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையே, டிரம்ப் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
FBI அதிகாரிகள் கைப்பற்றியுள்ள ஆவணங்கள் அனைத்தும் ஏற்கனவே பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டவை எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் நீதித்துறையிடம் ஆவணங்களை ஒப்படைத்திருப்பார் என்றும் வாதிட்டுள்ளனர்.
டொனால்டு டிரம்ப் மீது உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும், சட்ட சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், ஜனாதிபதி பொறுப்பில் இருந்த ஒருவர், தமது தனிப்பட்ட குடியிருப்பில் அரசாங்க ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்திருப்பது ஏற்க முடியாத செயல் எனவும் பரவலாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் சொத்துக்கள் குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாக சோதனையிடப்படுவது இதுவே முதல் தடவை என தெரிவித்துள்ளனர். ஆனால், டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சி தலைவர்கள் பலர் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கண்டித்துள்ளனர்.