மன்னாரில் எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றம்
மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றமான நிலை காணப்பட்டுள்ளது. அதேவேளை முகவர் மற்றும் பொது மக்கள் மத்தியில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், எரிவாயு பெறுவதற்காக குறித்த எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்னால் 10 நாட்களுக்கு மேலாக பலர் எரிவாயு சிலிண்டர்களை அடுக்கி வைத்த நிலையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சிலர் சிலிண்டருக்கு காவல் நின்றுள்ளனர்.
10 நாட்கள் கடந்தும் எரிவாயு, முகவர் நிலையத்திற்கு கிடைக்க பெறாத நிலையில் எரிவாயு சிலிண்டர்களும் அடுக்கப்பட்டு விற்பனை நிலையத்திற்க்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் மதியம் எரிவாயு விற்பனை நிலைய முகவர் அப்பகுதியில் அடுக்கி வைத்திருந்த எரிவாயு சிலிண்டர்களை தூக்கி எறிந்துள்ளார்.
அத்துடன் வரிசையில் வைக்கப்பட்ட சிலிண்டர் உரிமையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாது என வாய்தர்கத்திலும் ஈடுபட்ட நிலையில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது நீண்ட நாட்களாக எரிவாயு சிலிண்டர்களளை அடுக்கி வைத்து காவல் காத்து கொண்டிருந்த பொது மக்கள் எரிவாயு விற்பனை நிலைய முகவருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.