மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிசம் – 60 ஆண்டுகளின் தேவையை பூர்த்தியாக்கும்
மன்னார் படுகையில் சுமார் 5 பில்லியன் பீப்பாய்கள் எரிபொருளும் சுமார் 5 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக 2016 ஆம் ஆண்டு பொதுக் கணக்குகள் குழுவில் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த இயற்கை எரிவாயு சுமார் 60 வருட கால தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது எனவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மின்சாரத்தை 1130 கிலோவாட்டாக அதிகரிக்க முடியும் என்றும், இயற்கை எரிவாயு உற்பத்தி மூலம் 25 ஆண்டுகளில் சுமார் 200 பில்லியன் டொலர் அளவிற்கு பல்வேறு துறைகளில் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என குழுவின் தகவலில் தெரியவந்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட இரண்டு இடங்களிலும் எரிவாயுவை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதன் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து நாட்டிற்கு ஈட்டக்கூடிய வருவாயைப் பிரித்தெடுப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுக்கவோ அல்லது இந்த பகுதியை ஆராயவோ தவறியமை தொடர்பில் COPA குழு கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் நம்பகமான முதலீட்டாளரைக் கண்டுபிடிப்பது கடினம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த விடயத்தை கையாள்வதற்கு இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மன்னார் கடற்பகுதியில் எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பில் ஆராய்வதற்கான முறையான ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அரச கணக்குகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.