நாடளாவிய ரீதியில் அதிபர்கள்,ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி, அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், இன்றையதினம் (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கம்,ஒன்றிணைந்த அதிபர்கள் சங்கம்,ஆசிரிய ஆலோசகர்கள் சங்கம் உட்பட பல ஆசிரியர் சங்கங்கள் இணைந்து விடுத்தகோரிக்கைக்கு அமைவாக இந்த போராட்டதம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் வரவு குறைவாக இருந்த காரணத்தினால் மாணவர்கள் திரும்பிச்சென்றதையும் காணமுடிந்ததுடன் சில பாடசாலைகளில் உயர்தரப்பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையும் காணமுடிந்தது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு விதமான போராட்டங்களில் மக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இப்போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இந்த அரசாங்கம் மக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்த்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.