கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு – 49 பேர் கைது

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்டா வீதிப் பகுதியை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட அதிரடி நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 13 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரும் அவர்களுள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யுக்திய விசேட நடவடிக்கையின் கீழ் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் ஜம்பட்டா விதியின் போதி மரத்திற்கு அருகில் உள்ள வீதியை மூடி சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசேட நடவடிக்கைக்காக, எட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் போதைப்பொருள் கையாள்வதில் விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.