105 ஆவது பொன் அணிகள் போர் ஆரம்பம்


யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 105 ஆவது பொன் அணிகள் போர் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது.

யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்றும் நாளை சனிக்கிழமையும் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றது.

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்தது.

இவ்வருடம் 2022 இல் 105 ஆவது வருட இரு நாள் போட்டியும் 29 ஆவது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி 18 மாரச் 2022 இலும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி மார்ச் 21 இலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ளன.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 33 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. மிகுதிப் போட்டிகளின் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

ஒரு நாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 21 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன.

2020 இல் யாழ் மாவட்டத்திலே பாடசாலைகளுக்கிடையே முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இருபதுக்கு 20 முதல் கிரிக்கெட் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி பெற்றது.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு டெஸ்வினும் யாழ்ப்பாண கல்லூரிக்கு விஸ்னுகாந்தும் தலைமை தாங்குகின்றனர்.

இரு கல்லூரி அணிகளும் சமபலம் கொண்டவையாக காணப்படுவதினால் இக் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *