சிவராத்திரி உருவான கதை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

சிவராத்திரியான இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனைத்து சிவாலயங்களிலும், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

சிவபெருமானை வழிபடும் சிறப்பு மிக்க தினத்தில் ஒன்று, மகாசிவராத்திரி. இது மாசி மாத தேய்பிறை சதுர்த்தி அன்று கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினம் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனைத்து சிவாலயங்களிலும், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். சிவராத்திரி தோன்றியதற்கான காரணமாக புராணங்கள் பல தகவல்களைச் சொல்கின்றன. அதைப் பார்ப்போம்.

காக்கும் கடவுளான திருமாலுக்கும், படைப்புக் கடவுளான பிரம்மனுக்கு, தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி உதித்தது. அப்போது ஈசன், நெருப்பு வடிவமாக ஓங்கி உயர்ந்து நின்று, தன்னுடைய அடியையும், முடியையும் முதலில் கண்டு வருபவர்களே பெரியவர் என்று கூறினார். திருமால் அடியையும், பிரம்மன் முடியையும் தேடிச் சென்றனர். ஆனால் அவர்களால் அது முடியவில்லை. முடிவில் அவர்களுக்கு, ஈசன் சிவலிங்க மேனியாக காட்சியளித்த நாளே, ‘சிவராத்திரி’ என்கிறார்கள்.

தேவர்களும், அசுரர்களும் இணைந்து, அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலில் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. அது உலக உயிர்களை அழிக்கும் முன்பாக, ஈசன் அந்த விஷத்தை அருந்தினார். தங்களைக் காத்து நின்ற ஈசனை சதுர்த்தி தினத்தன்று, இரவு முழுவதும் தேவர்கள் பூஜித்து வழிபட்டதே ‘சிவராத்திரி’ ஆகும்.

ஒரு முறை பார்வதிதேவி, ஈசனின் கண்களை மூடினார். இதனால் உலகம் இருளில் மூழ்கியது. இதையடுத்து பார்வதி, ஓர் இரவில் நான்கு காலங்களிலும் ஈசனை வழிபட்டாள். இதையடுத்து உலகம் ஒளிபெற்றது. பார்வதி பூஜித்ததை நினைவுகூரும் விதமாகவே, நான்கு கால பூஜையோடு, சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.