நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நான்கு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களிலும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நேற்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி களுத்துறை பாலிந்தநுவர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அது, 115 மி.மீற்றராக பதிவாகியிருந்தது.
அதன்படி, குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்து வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 170 கன மீற்றராகும்.
இதனால் புளத்சிங்கள – மொல்காவ பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும், பாலிந்தநுவரவில் பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத பிரதேசங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
372 குடும்பங்களைச் சேர்ந்த 1,492 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 63 வீடுகள் பகுதியளவிலும் 03 சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த 12ஆம் திகதி வீசிய பலத்த காற்றினால் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் குருவிட்ட பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிங் கங்கையின் மேல் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹினிதும, உடுகம, மாபலகம போன்ற பகுதிகளும் சிறிதளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கிங் கங்கையின் கீழ் பகுதியில் உள்ள வக்வெல்ல பாலம் குப்பைகளால் அடைக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் நில்வலா நதியும் நிரம்பி வழிகிறது.
இதன் காரணமாக அக்குரஸ்ஸ, தெஹிகஸ்ப, போபாகொட, பொரதொட்ட, தலஹகம மற்றும் மாகந்துர பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மத்திய மலையகத்தில் உள்ள நீர்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது.
இதன்காரணமாக லக்சபான மின் உற்பத்தி நிலைய வளாகத்திற்குட்பட்ட மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.