யாழில் 6 கோடி ரூபாய் மோசடி – பல்கலைகழக ஊழியர் கைது

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெரும் மோசடி ஒன்று நடைபெற்ற நிலையில் , பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணொருவரை கைது செய்திருந்தனர்.

குறித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அந்த பெண்ணினை வழிநடத்தி , மோசடிகளில் ஈடுபட்டவர் எனும் குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை முன்னதாக கைது செய்யப்பட்ட இளம் பெண் , பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்ற சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியினை பல்கலைக்கழக அலுவலரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.