மாணவர்கள் கடத்தல் – பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

பாடசாலை மாணவர்களை கடத்தும் முயற்சிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டதாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சில முறைப்பாடுகள் தவறானவை எனவும் காவல்துறையினரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக தவறான தகவல்களை பரப்புபவர்கள் மற்றும் அந்த பிரச்சாரங்களுக்கு ஆதரவளிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் இது தொடர்பில் பல தடவைகள் விழிப்புணர்வை வழங்கியிருந்ததாகவும், எந்த பொறுப்பும் இன்றி வெளியிடப்பட்ட, பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் இவ்வாறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என இலங்கை காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.