முன்னாள் காதலியின் புதிய காதலனை கொல்ல கைக்குண்டுடன் அலைந்த இளைஞன் கைது


பேஸ்புக் மூலம் கல்கமுவ – மஹகல்கடவல பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துவந்த காலியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரை கைவிட்டு அம்பாறையை சேர்ந்த மற்றொரு இளைஞனை காதலிக்க ஆரம்பித்ததால் தனது முன்னாள் காதலின் புதிய காதலனை கொல்ல கைக்குண்டுடன் அலைந்த 28 வயது இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, 28 வயதான குறித்த இளைஞன் காலி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை முகப்புத்தகத்தின் ஊடாக சந்தித்து காதலித்து வந்துள்ளார். எனினும் அவ்விருவரும் ஒரு போதும் நேரில் சந்தித்திருக்கவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறான நிலையில், அண்மைக்காலமாக குறித்த யுவதி கல்கமுவ இளைஞனை கைவிட்டு, அம்பாறை சுகாதார பரிசோதகர் பணிமனையில் சேவையாற்றும் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இவ்வாறான நிலையில், அம்பாறை இளைஞர் தொடர்பில் முகப் புத்தகம் ஊடாக தகவல்களை சேகரித்துள்ள கல்கமுவ காதலனான இளைஞன், பின்னர் குண்டொன்றினை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடாத்தி,

அம்பாறை இளைஞனை கொலைச் செய்யும் நோக்கத்துடன் கடந்த 26 ஆம் திகதி சந்தேக நபரான இளைஞன் அம்பாறை நோக்கி சென்றுள்ளார்.இந்நிலையில், அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்து, குறித்த இளைஞனை சந்தித்து குண்டினை வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் நடாத்த, சந்தேக நபர் கடந்த 27 ஆம் திகதி அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

எனினும் அப்போது அவரால் அந் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.இதனையடுத்து குறித்த இளைஞன் திரும்பி வரும் வரை கைக்குண்டுடன், அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவின் தீகவாபிக்கு திரும்பும் சந்தியில் சந்தேக நபர் காத்துக்கிடந்துள்ளார்.

இதன்போது அவ்விளைஞன் தொடர்பில் சந்தேகம் கொண்ட பிரதேசவாசி ஒருவர் அளித்த தகவல் பிரகாரம் அங்கு சென்றுள்ள பொலிஸார், சந்தேக நபரைக் கைதுச் செய்துள்ளதுடன் குண்டையும் மீட்டுள்ளனர். சந்தேக நபரைக் கைது செய்ய முயன்ற போது, அவர் வயல் வெளி ஊடாக தப்பியோட முயன்றுள்ளதுடன் பின்னர் ஒருவாறு பொலிஸார் சந்தேக நபரை சமாதனம் செய்து கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரிடம் இருந்து, கைக்குண்டு ஒன்றும் கூரிய கத்தியொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைக்குண்டானது, இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் மரணமடைந்த தனது உறவுக்காரர் ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணையில் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *